சிறுதானிய சாகுபடியில் வியப்பான லாபம் – விருதுநகர் அனுபவம்
சிறுதானிகள் அதிக சத்துக்கள் கொண்டதாலும், குறைந்த நீர் மற்றும் பராமரிப்பில் அதிக லாபம் தருவதாலும், மக்களில் இதற்கான விழிப்புணர்வு நாளொன்றும் அதிகரித்து வருகிறது. இதனால், சிறுதானியங்களின் விற்பனை வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. மானாவாரி விவசாயிகள் பலர் சிறுதானிய சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், மத்தியசேனை அருகே உள்ள காரிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி, இயற்கை விவசாயத்தில் குதிரைவாலி உற்பத்தி செய்து வருகிறார். விதைகளாகவும், பெரும்பகுதியை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம், அவர் நல்ல லாபம் ஈட்டுகிறார்.
ஒரு பகல் பொழுதில் அவரது தோட்டத்தைச் சந்தித்த போது, தோட்டமும் வீடும் ஒருங்கிணைந்த அமைப்பில் இருந்தது. அறுவடை செய்த குதிரைவாலியை சுத்தப்படுத்தி மூட்டைக் கட்டும் பணியில் ஈடுபட்ட லட்சுமி, புன்னகையுடன் நம்மை வரவேற்று, உற்சாகமாக தனது அனுபவத்தை பகிர்ந்தார்.











