60 ஏக்கர் நெல் தோட்டத்தில் லாபம் பெறும் வழக்கறிஞர் அனுபவம்
தஞ்சாவூர், அருளானந்தம் நகரில் சட்ட ஆலோசனை மையம் நடத்தி வருபவர் வழக்கறிஞர் குலோத்துங்கன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றார். 60 ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய நெல் வகைகளை சாகுபடி செய்து, அதை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்து, கணிசமான லாபம் ஈட்டுகிறார்.
தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் வழியில் உள்ள கள்ளப்பெரம்பூரில் அமைந்துள்ள இவருடைய இயற்கை வேளாண் பண்ணையை, பனிப் பொழிந்த ஒரு காலையில் சந்திக்க சென்றோம். சாலையின் இரு பக்கங்களிலும் நீண்ட தூரம் பசுமையான நெல் வயல்கள் கண்ணுக்கு முன் விரிந்தன. அவற்றைக் கடந்தபடியே, குலோத்துங்கனின் பண்ணையை நாங்கள் அணுகினோம்.











