கரூர் நிகழ்வுக்குப் பிறகு விஜய் இல்லத்தில் கடும் போலீஸ் பாதுகாப்பு!
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச்சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நடிகர் விஜய் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு கடுமையாக வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அன்று இரவே விஜய், கரூரில் இருந்து சென்னையின் நீலாங்கரையில் உள்ள தன் இல்லத்திற்கு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்து, ஒரு ஆய்வாளர் தலைமையில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் வீடு அமைந்துள்ள சாலையில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டமாக கூடாமல் இருக்க, போலீசார் தடுப்புகள் அமைத்து கடுமையான கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தப் பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், பிறர் அவ்வழியாகச் செல்ல முயற்சித்தால் உடனே திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கை, விஜய் மீது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.











