மொராக்கோவில் வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – அரசு எதிர்ப்புப் போராட்டம் கம்பிக்குது
நேபாளம், வங்கதேசத்துக்கு பிறகு, வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் Gen Z எனப்படும் இளம் தலைமுறை இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். பாதுகாப்பு படையினருடன் மோதல்களில் 3 பேர் பலியான நிலையில், இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது.
மொராக்கோ தற்போது வன்முறை, தீ வைப்பு போன்ற பதற்ற சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளது. அரசாங்கத்தின் அலட்சியத்தால் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்கு போதுமான நிதி வழங்கப்படாமல் இருப்பது இளம் தலைமுறை இளைஞர்களை போராட்டத்திற்கு தூண்டியது.
2030ஆம் ஆண்டு மொராக்கோவில் நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக்கோப்பை போட்டிக்காக பல கோடி செலவில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்ற நிலையில், பொதுச் சேவைகள் நிதியின்மையின் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. கூடுதலாக, அரசு அலுவலகங்களில் முறைகேடுகள் மற்றும் ஊழல்கள், ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகள், இளம் தலைமுறையினரிடையே கோபத்தை உண்டாக்கியுள்ளன. அண்மையில் அகாடிர் நகரில் உள்ள பொது மருத்துவமனையில் பிரசவத்தின்போது 8 கர்ப்பிணிகள் உயிரிழந்த சம்பவம் இளைஞர்களுக்கு ஆத்திரத்தை தூண்டிய முக்கிய காரணமாகும்.
Gen Z போராட்டம்:
“விளையாட்டு அரங்குகள் எங்கே? மருத்துவமனைகள் எங்கே?” என்று முழக்கமிட்ட இளைஞர்கள் போராட்டத்தை தொடங்கி, மொராக்கோவின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. சமூக சமத்துவமின்மைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், ஊழலுக்கு எதிராக முழக்கமிடவும் இளைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
மோதல்கள் மற்றும் பலி:
லெகிலா நகரில் நடந்த போராட்டத்தின் போது, பாதுகாப்புப் படையினரும், போராட்டக்காரர்களும் மோதியதில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மொராக்கோ அரசு போராட்டக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அறிவித்துள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள், மன்னர் ஆறாம் முகமது நேரடியாக பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
மொராக்கோவில் மன்னருக்கு அரசை நியமிக்கும் மற்றும் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் உள்ள நிலையில், Gen Z இளைஞர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். போராட்டம் பரவி வரும் நிலையில், அரசு மற்றும் மன்னர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்பது மிக முக்கியமாக பார்க்கப்பட இருக்கிறது.











