முதல் முறையாக இந்தியா வரவிருக்கும் தலிபான் வெளியுறவு அமைச்சர் – புதிய வியூகம், பாகிஸ்தானுக்கு சவால்
தலிபான் தலைவர்களுக்குப் பயணத் தடைகள் இருக்கும் நிலையில், இந்தியா முதல் முறையாக தலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி அவரை வரவேற்கத் தயாராக உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் “தற்காலிக விலக்கு” பெறப்பட்டதன் மூலம், அவர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வர உள்ளார்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகள் கடந்த பல ஆண்டுகளாக வலிமையான நல்லுறவை கொண்டுள்ளன. 1996 மற்றும் 2001 ஆண்டுகளுக்கிடையிலான காலத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய போது, இந்தியா வடக்கு கூட்டணியை ஆதரித்து வந்தது. 2001-ல் அமெரிக்கா தலிபான்களை ஆட்சியிலிருந்து நீக்கிய பின்னரும் இந்தியா 3 பில்லியன் டாலர் மதிப்பில் பல்வேறு உதவி திட்டங்களை வழங்கியது.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் மீண்டும் ஆப்கான் ஆட்சியை கைப்பற்றியதும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இருநாடுகளும் உறவுகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், தலிபான் ஆட்சிக் குழுவினர் உலக நாடுகளுடன் 1,500 க்கும் மேற்பட்ட அரசியலமைப்புச் சந்திப்புகளை நடத்தியுள்ளனர். இதில் சீனா 215 சந்திப்புகளுடன் முதலிடத்தில், துருக்கி 194 சந்திப்புகளுடன் இரண்டாவது, பாகிஸ்தான் 118 சந்திப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்திய வெளியுறவு அதிகாரிகள், குறிப்பாக ஜே.பி.சிங் மற்றும் மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தலிபான் அமைச்சர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகம் உட்பட முக்கிய துறைமுகங்களின் மேம்பாடு குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தலிபான் அரசு கண்டித்ததற்காக, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கைகள் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் முக்கியமானவை.
இந்திய அரசு கடந்த டிசம்பரில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கொடுத்த உதவிகளும் குறிப்பிடத்தக்கவை:
- 50,000 மெட்ரிக் டன்களுக்கு மேற்பட்ட கோதுமை
- 300 டன் மருந்துகள்
- 27 டன் இயற்கை பேரிடர் நிவாரண உதவி
- 40,000 லிட்டர் பூச்சிக்கொல்லி மருந்துகள்
- 100 மில்லியன் போலியோ சொட்டு மருந்துகள்
- 1.5 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசி
- போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கான 11,000 யூனிட் சுகாதார கருவிகள்
- 500 யூனிட்களுக்கும் மேற்பட்ட குளிர்கால ஆடைகள்
- பள்ளி குழந்தைகளுக்கான 1.2 டன் கல்வி உபகரணங்கள்
இந்த நிலையில், அமீர் கான் முத்தாகி 9ஆம் தேதி இந்தியா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உறவுகள் வலுப்பட்டு, இருநாடுகளுக்கும் பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.











