தொடர் விடுமுறை முடிந்ததால் சென்னை நோக்கி திரண்ட மக்கள் – ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தொடர் விடுமுறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஒருவாரம் விடுமுறை வழங்கப்பட்டது. அதேசமயம், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகள் காரணமாக, சென்னையில் பணிபுரியும் தென் மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இந்நிலையில், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதும், பணிநாள்களும் தொடங்கியதுடன், பெரும்பாலானோர் சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டனர். இதனால் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் 3 கிலோமீட்டர் நீளத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூர் மேம்பாலம் வழியாக கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இதேபோல், தொடர் விடுமுறை முடிவில் மக்கள் தங்கள் பணிகளுக்குத் திரும்பியதால் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் கூட கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடியில் இருபுறமும் சுமார் 2 கிலோமீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுபோன்ற நிலைமை ஒவ்வொரு விடுமுறையிலும் ஏற்படுவதைத் தவிர்க்க, மாற்று வழிகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











