நவராத்திரி பண்டிகையின் தொடர்ச்சியாக அக்டோபர் 1ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை, அதற்கு அடுத்த நாள் விஜயதசமி கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக ஆயுத பூஜை பண்டிகையில் “பொரி” முக்கிய பங்கு வகிக்கிறது.
சேலம் அருகே, பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படும் பொரி உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. ஓமலூர் அருகே காமாண்டபட்டியில் தொழிலாளர்கள் எந்திரம் பயன்படுத்தாமல், அடுப்பில் பொறுப்புடன் பொரி தயாரித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்து பொரி வாங்க ஆர்டர்கள் குவிந்ததால், 24 மணி நேரமும் உற்பத்தி தொடர்கிறது.
பொரியின் மணமும், சுவையும் மாறாமல் இருக்க, உற்பத்தியாளர்கள் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து கார் நெல்லை வாங்கி உரிய முறையில் பக்குவப்படுத்தி தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக, ஆயுத பூஜைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் பொரி விற்பனை அதிகரித்துள்ளது.
பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட பொரியை வாங்க, மக்கள் வரவேற்கும் நிலையில், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகின்றனர்.