திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவின் இரண்டாம் நாளில், பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் நல்கினர்.
உலகப் புகழ் பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில், கார்த்திகை தீபவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக, விநாயகர், முருகன், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் 16-கால் மண்டபத்தில் அருள்பாலித்தனர்.
அதனைத் தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர விமானத்தில் மாடவீதிகள் வழியாக வீதி உலா வருகை தந்து பக்தர்களுக்கு தெய்வீக தரிசனம் அருளினர். பெரும் திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற்றனர்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீப தரிசனம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.











