கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் தூய்மை பணியாளர்கள் தினமும் வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பலர் தங்கள் வீட்டு குப்பைகளை ஒழுங்காக ஒப்படைக்காமல், சாலைகளில் வீசுவதால் நகரின் முக்கிய பகுதிகளே குப்பை மேடுகளாக மாறி வருகின்றன.
இந்த நிலைமையால் நகராட்சி நிர்வாகத்துக்கு சுத்தம் பேணுவது பெரும் சவாலாக உள்ளது. இதற்கு முன்னர், சாலைகளில் குப்பை வீசிய சிலரின் வீட்டு முன் அதிகாரிகள் குப்பை கொட்டிய சம்பவங்களும் பேசுபொருளாகியிருந்தன.
இப்போது, குப்பை பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் (BBMP) புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, சாலையில் குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்புவோருக்கு ரூ.250 சன்மானம் வழங்கப்படும்.
மேலும், குப்பை வீசும் நபர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் நகரில் குப்பை வீசும் சம்பவங்கள் குறைந்து, தூய்மையான பெங்களூரை உருவாக்கும் நோக்கம் நிறைவேறும் என அதிகாரிகள் நம்புகின்றனர்











