அண்ணாமலை பெயரை சொல்லி மிரட்டி தம்பதியிடமிருந்து ரூ.10 லட்சம் பறித்த 3 பாஜவினர் கைது
கோவை மாவட்டம் அன்னூர் அருகே அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அண்ணாமலை பெயரை கூறி தம்பதியிடமிருந்து ரூ.10 லட்சம் பறித்த பாஜக தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அன்னூர் அருகே குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் – நாகமணி தம்பதியின் மகன் திருமூர்த்தி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் 2023 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். அந்த வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், கடந்த மே மாதம் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
ஜூன் மாதம் இழப்பீட்டு தொகை கிடைத்தபோது, அந்த வழக்கில் உதவி செய்ததாக கூறி, கோவை வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் சாமிநாதன் (அ) ராஜராஜசாமி (52), கோகுலகண்ணன் மற்றும் ராசுக்குட்டி ஆகிய மூவரும் தம்பதியை மிரட்டி ரூ.10 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர், மீண்டும் தம்பதியிடம் தொடர்பு கொண்டு, “அண்ணாமலைக்கு கட்சி நிதியாக ரூ.10 லட்சம் தரவேண்டும்; இல்லையெனில் உயிருடன் விடமாட்டோம்” என மிரட்டியதாக தகவல்.
இது தொடர்பாக தம்பதியின் இரண்டாவது மகன் அருணாச்சலம் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தனது செயலாளர் மூலம் அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சம்பவத்துடன் தனக்கோ கட்சியோ எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தார்.
அந்நிலையில், அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சாமிநாதன் (அ) ராஜராஜசாமி, கோகுலகண்ணன் மற்றும் ராசுக்குட்டி ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.











