“இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது” – பிரதமர் மோடி
2014க்கு முன் பலவீனமான பொருளாதார நிலையைச் சந்தித்த இந்தியா, இன்று உலகின் முன்னணி மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாற தெளிவாக தயாராகும் நிலையில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
பீகாரில் 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தொழில் மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்த பீகாரில் உள்ள ஜன் நாயக் கர்பூர் தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மேலும், பீகாரின் நிச்சய ஸ்வயம் சஹாயத் பட்டா யோஜனை மூலம் 5 லட்சம் பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
பீகாரில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பாட்னாவில் உள்ள NIT வளாகத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து டெல்லியில் விஞ்ஞான் பவனில் இருந்து காணொலி வாயிலாக பேசிய பிரதமர்,
“உலகின் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பது நமது மிகப்பெரிய பலம். பீகாரின் இளைஞர்கள் வளரும் போது நாட்டின் வளர்ச்சியும் வலுப்பெறும்,”
என்று வலியுறுத்தினார்.
மேலும், நாட்டில் தற்போது ஜிஎஸ்டி சேமிப்பு கொண்டாட்டம் நடைபெற்று வருவதையும், அதனால் ஏராளமான இளைஞர்கள் வாகனங்கள் வாங்கி மகிழ்வதைப் பற்றியும் குறிப்பிட்டார். இளைஞர்களுக்கும், நாட்டிற்கும் தேவையான முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு செய்யப்பட்டதற்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி, இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகிய இரண்டையும் இணைத்து இந்தியாவின் வளர்ச்சியை வேகமாக முன்னெடுக்குமெனும் தகவலை வெளிப்படுத்துகிறது.











