சரணாலயம் அமைப்பதன் பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத் கண்டனம்!
நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் “சரணாலயம் அமைக்கிறோம்” என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்படுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் பிருந்தா காரத் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநாட்டில், மாநில செயலாளர் சண்முகம் மற்றும் பிருந்தா காரத் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது உரையாற்றிய பிருந்தா காரத் கூறியதாவது –
“வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் நில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. மலைவாழ் மக்களின் உரிமைகள் அமலாக்கப்படாததால், அவர்கள் வாழ்க்கை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது,
“தமிழகத்தில் சுமார் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் நில உரிமைக்காக மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால், அவற்றில் பாதி மனுக்களும் கூட இதுவரை அரசு ஏற்கவில்லை. மலைவாழ் மக்களின் சட்ட உரிமைகள் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம். இல்லையெனில், அவர்கள் அடையாளமே அழிந்து விடும்,” எனக் கண்டனம் தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியில் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், “தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் சனிக்கிழமை மட்டும் கட்சியை இயக்கும் நிலை உள்ளது” என்று தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.
அவர் மேலும்,
“கேரளாவைப் போன்று, மலைப் புலையர் சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும்,
“ஆனால் தற்போது அதிகாரிகள் தவறாக அவர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்க்கும் வகையில் கடிதங்கள் அனுப்பியுள்ளனர். இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்,” என்றும் கூறினார்.
மாநாட்டில் பழங்குடியினர் உரிமைகள் மற்றும் வன சட்ட அமலாக்கம் குறித்து பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.











