“ஊனம் தடையாகாது” என நிரூபித்த 12 வயது சிறுவனின் கடல் சாதனை – பாராட்டுகள் பெருகுகின்றன!
மன வலிமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில், 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் கடலில் 30 கிலோமீட்டர் நீந்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சென்னை முகப்பேர் பகுதியில் வசிக்கும் பெரியார் செல்வன் – பத்மபிரியா தம்பதிகளின் மகனான புவி ஆற்றல், பிறவியிலேயே ஒரு கால் பாதிக்கப்பட்டவர். இருந்தாலும், அதனை எப்போதும் ஒரு தடையாக நினைக்காமல், சிறுவயது முதலே நீச்சலில் ஆர்வம் கொண்டு, பல மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.
அந்த உற்சாகத்தின் தொடர்ச்சியாக, புவி ஆற்றல் தற்போது கடல் நீந்தலில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து படகில் இலங்கை கரையை அடைந்து, அங்கிருந்து அதிகாலை தனது நீச்சல் பயணத்தைத் தொடங்கினார். கடலின் வேகமான நீரோட்டங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு, இடைவிடாது 9 மணி நேரம் 11 நிமிடங்கள் நீந்தி, 30 கிலோமீட்டர் தூரத்தை கடந்து தனுஷ்கோடி கரையை வெற்றிகரமாக அடைந்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நீச்சல் ஆர்வலர்கள் சிறுவனை உற்சாகமாக வரவேற்று, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து பாராட்டினர்.
இந்தச் சாதனை, “மாற்றுத்திறனே திறமைக்கு தடையல்ல” என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.











