தூத்துக்குடி | 30.01.2026
வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி புனித வெள்ளி (Good Friday) தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் அவர்கள் தமிழக முதல்வரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில், புனித வெள்ளி நாள் இயேசு கிறிஸ்துவின் தியாக மரணத்தை நினைவுகூரும் புனிதமான நாள் என்றும், அந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ சமூகத்தினர் சிலுவைப் பாதை ஊர்வலங்கள், இரத்த தான முகாம்கள், அமைதி ஊர்வலங்கள், அன்னதானங்கள் உள்ளிட்ட ஆன்மிக மற்றும் சமூக பணிகளில் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி மற்றும் கேரளா மாநிலங்களில் புனித வெள்ளி தினத்தில் மதுக்கடைகள் மூடப்படுவது நடைமுறையில் உள்ளதாகவும், தமிழ்நாட்டிலும் ஏற்கனவே மகாவீர் ஜெயந்தி, மீலாது நபி, வள்ளலார் நினைவு நாள் போன்ற தினங்களில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன என்பதையும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோலவே, புனித வெள்ளி தினத்தையும் மதுக்கடை மூடல் நாளாக அறிவிக்க வேண்டும் என கடந்த 03.03.2022 முதல் பல்வேறு காலகட்டங்களில் அரசியல் கட்சிகள், சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர்கள் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருவதாகவும், முன்னாள் சிறுபான்மையினர் நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் தற்போதைய ஆணையர் அருட்தந்தை ஜோ ஆருண் ஆகியோருக்கும் இதுகுறித்து மனுக்கள் அளிக்கப்பட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் மதுக்கடை எண்ணிக்கை குறைப்பு, மறுவாழ்வு மற்றும் மதுவிலக்கு சிகிச்சை மையங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களையும் ஆயர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, சட்டமன்ற விதி 110ன் கீழ் தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு முன்பாகவே ஒரு சிறப்பு கொள்கை தீர்மானம் எடுத்து, புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கோரிக்கைக்கு ஆதரவாக, தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு அருட்தந்தை ஜோசப் ரவிபாலன், மறைமாவட்ட தலைமைச் செயலர் அருட்தந்தை சகாய லூட்ரின் உள்ளிட்ட மறைமாவட்ட நிர்வாகிகள் கடிதத்தில் இணைந்து கையெழுத்திட்டுள்ளனர்.
Reporter – R. Kannan, Thoothukudi .











