தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவரும், திமுக தோழமை கட்சித் தலைவருமான ஜி.ஜி. டாக்டர் சிவா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மேற்கு மாவட்டம், பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டை விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் பத்திரிகையாளரும், சமூக சேவகரும், தேசிய முன்னேற்றக் கழகத்தின் எஸ்.டி. துறை மாநிலத் தலைவருமான என்.கே. ஏகாநந்தன் அவர்கள் ஆவார். இவர் பல்வேறு கிராமங்களில் நலத்திட்ட உதவிகளை செய்து, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி, முதியோர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து, அனைத்து தரப்பு மக்களிடமும் நற்பெயரைப் பெற்ற சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டை பகுதியில் தொடர்ந்து இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத் திருட்டுகள், வாகனங்களில் இருந்து பெட்ரோல், டீசல் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். இந்த சமூக விரோத செயல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனுக்கள் அளித்தும், இரவு நேரங்களில் வழக்கமாக மேற்கொள்ள வேண்டிய ரோந்து பணிகள் முறையாக நடைபெறாதது கிராம மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சூழலில், சமூக சேவையில் ஈடுபட்டு வரும் என்.கே. ஏகாநந்தன் அவர்கள் நேரடியாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டித்தால், அது அவரது உயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் அபாயம் உள்ளது. இதற்கு முன் தமிழ்நாடு முழுவதும் பல சமூக சேவகர்கள் உயிரிழந்த சம்பவங்கள் காவல்துறைக்கு நன்கு தெரிந்தவை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டை பகுதியில் இரவு நேர காவல் ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்தி, தினசரி பதிவேட்டில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கையொப்பமிட்டு பதிவு செய்யும் முறையை கட்டாயமாக நடைமுறைப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் இரவு பகல் பாராமல் மக்களை பாதுகாத்து வரும் நிலையில், மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைபிடித்தால், அது காவல்துறைக்கு பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்களையும் களங்கத்தையும் ஏற்படுத்தும்.
ஆகவே, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இப்பிரச்சினைக்கு தனி கவனம் செலுத்தி, ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் கூடுதல் காவலர்களை நியமித்து, இரவு நேர ரோந்து பணியை பலப்படுத்தி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் சார்பில் வலியுறுத்திக் கோரிக்கை வைக்கிறோம். இந்த கோரிக்கையை பரிசீலித்து, நல்லதொரு முடிவை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு ஜி.ஜி. டாக்டர் சிவா அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நை.க.ஏகாநந்தன்- துணை ஆசிரியர்.











