கீழக்கரை பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், எந்தச் சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக வள்ளல் சீதக்காதி சாலை பகுதியை ஒட்டிய கடற்கரைப் பகுதியில், திறந்த கால்வாய் வழியாக கருப்பு நிற கழிவுநீர் கடலுக்குள் செல்லும் நிலை காணப்படுகிறது.
இந்த கழிவுநீரால் கடல் நீர் மாசடைந்து, மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதுடன், மீனவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், இப்பகுதியில் கடலில் குளிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தோல் நோய்கள், குடல் சம்பந்தமான நோய்கள், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுற்றுப்புற ஆர்வலரும் சமூக செயல்பாட்டாளருமான முகைதீன் இப்ராஹிம் அவர்கள் கூறுகையில், “கழிவுநீர் தொடர்ந்து கடலில் கலப்பது கடற்கரை மணற்பரப்பையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும். இது நீண்டகாலத்தில் கடல்சூழலையே அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்” என எச்சரித்தார்
எனவே, கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, கழிவுநீரை முறையாக சுத்திகரித்து வெளியேற்றும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், திறந்த கால்வாய்களை மூடிக் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையேல், இன்று கவனிக்கப்படாத இந்த பிரச்சனை, நாளை பெரும் சுற்றுச்சூழல் பேரழிவாக மாறும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறப்பு நிருபர் – கீழை பிரபாகரன்.
தொடர்பு எண் – +91 97892 29862










