2025 ஜூலை 2 அன்று, புகாராளர் மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அமெரிக்கன் மருத்துவமனை வரை மினி பேருந்தில் பயணம் செய்தனர். நான்கு கிலோமீட்டருக்கும் குறைவான இந்த பயணத்திற்கு, ஒருவருக்கு ரூ.10 என்ற கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், அரசாணைப்படி இந்த தூரத்திற்கு குறைந்த கட்டணம் ரூ.4 ஆக இருக்க வேண்டும் என புகாராளரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாராளர் கூறியதாவது, கட்டண விவரத்தை கேட்டபோது, நடத்துனர் தங்களது நிறுவனத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விளக்கினார். இது அவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 10.07.2025 அன்று, வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பதிவு தபால் மூலமாக புகார் அனுப்பப்பட்டது. அந்த புகாரின் நகல் நடத்துனரிடம் சென்றதாகவும், அவர் புகாராளரை அணுகி புகாரை திரும்பப் பெறுமாறு கேட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாராளர் தெரிவித்ததாவது, தொடர்ந்து பல முறை மினி பேருந்துகளில் ஆய்வு பயணம் மேற்கொண்டபோதும் கட்டண வசூல் முறை மாற்றமில்லாமல் இருந்ததாகவும், பயண கட்டண விவர அட்டவணை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை என்றும் கூறினார்.
புகாரின் பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் விசாரணை நடத்தி, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புகாராளருக்கு தெரிவிக்கப்பட்டது. அபராதம் மாவட்ட ஆட்சியரால் மட்டுமே விதிக்கப்பட முடியும் எனவும் விளக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வு பயணங்களிலும் கட்டண வசூல் மாற்றமின்றி இருந்ததாக புகாராளர் கூறுகிறார். மேலும், வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோருக்கும் பதிவு தபால் மூலம் மீண்டும் புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புகாரின் இறுதிப் பகுதியில், பலமுறை புகார் அளித்தபோதும் நிலைமை மாற்றமின்றி இருப்பதை குறித்து தனது மனவருத்தத்தையும், தொடர்புடைய அதிகாரிகள் இந்த விவகாரத்தில் கூடுதல் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பையும் புகாராளர் பதிவு செய்துள்ளார்.
இப்படிக்கு
புரட்சிகரத் தோழர்
விபி சிங்,
வழக்கறிஞர் அணியின் மாநில துணை செயலாளர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.











